கருணாநிதி இறுதிச்சடங்கு விவகாரம்: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
கருணாநிதி இறுதிச்சடங்கு விவகாரம் தொடர்பாக மு.க. ஸ்டாலின்,அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும், நஞ்சை விதைக்கும் பழி சொல்லையும் வெளியிட்டு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி இறுதிச்சடங்கு விவகாரம் தொடர்பாக திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின், அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும், நஞ்சை விதைக்கும் பழி சொல்லையும் வெளியிட்டு இருப்பதாக மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காழ்ப்புணர்ச்சியாலும் ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியாலும் அண்ணா சதுக்கத்தில் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க மறுத்ததாக மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை அவர் விமர்சித்துள்ளார்.
கருணாநிதி மறைவுக்கு 7 நாள் அரசு துக்கம் அனுசரிப்பு - ராஜாஜி ஹாலில் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு - முழு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கத்திற்கு உத்தரவு என தமிழக அரசின் பல்வேறு பணிகளையும் அறிக்கையில், டி. ஜெயக்குமார் பட்டியலிட்டு உள்ளார். மெரீனா புதிய நினைவிடங்கள் விவகாரத்தில் 5 வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், சட்டச்சிக்கல் உருவாகி, கடைசி நேரத்தில் பெரும் குழப்பம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அண்ணா சதுக்கத்தில் இடம் தர முடியாத சூழல் உருவானதாகவும் விளக்கம் அளித்துள்ளார். திமுக தலைமை, பழைய பாதையில் பயணித்து, பழிச்சொல் வீசுவது கண்டு, நாங்கள் கலங்கப் போவதும் இல்லை - கடமை தவறப் போவதும் இல்லை என அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.