தமிழகத்தில் ஆர்டர்லி முறை இல்லை" - துரைமுருகன் கேள்விக்கு முதலமைச்சர் பதில்
தமிழகத்தில் ஆர்டர்லி முறை தற்போது இல்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
பொதுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், தமிழகத்தில் செயின்பறிப்பு, கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாகவும், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதாகவும் குறை கூறினார். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக தமிழக காவல்துறை செயல்படுவதாக கூறும் தமிழக அரசு, அவர்களை வேலைக்காரர்களை விட கேவலமாக நடத்துவதாக துரைமுருகன் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, திமுக ஆட்சிக்காலத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, அதிமுக ஆட்சிக்காலத்தில் குற்றச்சம்பவங்கள் பெரும்பாலும் குறைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். காவல்துறையில் ஆர்டர்லி முறை நடைமுறையில் இல்லை எனவும், காவல்துறை அதிகாரிகளுக்கு இருப்பிட உதவியாளர் 86 மட்டுமே பணியாற்றி வருவதாகவும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.