சூரல் மலையை அடுத்த கிராமம் எங்கே? எட்டிப்பார்த்தால் குலைநடுக்கம் - முப்படைகளும் அதிர்ந்த காட்சி

Update: 2024-08-03 05:28 GMT

கேரள மாநிலம் வயநாடு மீட்புப் பணியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அதே சமயம், முண்டகை, சூரல் மலையைத் தொடர்ந்து புஞ்சிரி மட்டத்திலும் மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், அங்கு எத்தனை உயிர்கள் புதைந்துள்ளனவோ என்ற அச்சம் எழுந்துள்ளது...

பேய் மழை புரட்டிப்போட்டது வயநாட்டை...நிலச்சரிவால் மண்ணோடு புதைந்து போயின எண்ணற்ற உயிர்கள்...ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன உடல்கள்...

தேயிலைத் தோட்டம் அமைத்தல், ரிசார்ட்டு கட்டுதல் என்று எதார்த்தமான நிலத்தன்மைக்கு மாறாக மனிதர்கள் செய்த தவறு தான் இத்தனை பேரழிவுக்கும் காரணம் என புவியியலாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்...

யார் யாரோ செய்த தவறுகளால் ஆண்டாண்டு காலமாக மண்ணையும், மலையையும் மட்டுமே நம்பியிருந்த பழங்குடியின மக்களுக்கும் இந்த நிலச்சரிவு பாரபட்சம் பார்க்கவில்லை...

வனப்பகுதியை விட்டு வெளியேறவும் முடியாமல்... அங்கே இருக்கவும் முடியாமல் தவித்து வந்தனர் பழங்குடியின குடும்பங்கள் சில...

அவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில்...

சூச்சிப்பாறை அருவி அடிவாரத்தில் ஏராகுண்டு எனும் இடத்தில் சிக்கித் தவித்த கிருஷ்ணன்...அவரது மனைவி சாந்தா...அத்தம்பதியின் 4 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்...

இது ஒருபுறமிருக்க...சூரல் மலையைத் தொடர்ந்து புஞ்சிரிமட்டத்திலும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது...

தோண்டத் தோண்ட சடலங்கள் மட்டுமே எட்டிப்பார்க்கும் நிலையில் புஞ்சிரி மட்டத்தில் இன்னும் எத்தனை உயிர்கள் புதைந்துள்ளனவோ என்று நினைத்துப் பார்க்கும் போதே நெஞ்சு பதறுகிறது...

சூரல் மலையில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் தான் இந்த புஞ்சிரி மட்டம் கிராமம் அமைந்திருந்தது...

ஆனால் இப்போது அக்கிராமம் இருந்த தடமே தெரியவில்லை...

முண்டகையைத் தாண்டித்தான் புஞ்சிரி மட்டம் செல்ல வேண்டும்...ஆனால் முண்டகை செல்லும் பாதையில் இருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் புஞ்சிரிமட்டம் கிராமம் கேட்பாரற்றுக் கிடந்தது...

பாலம் அமைக்கப்பட்டதும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர்...

கூட்டம் கூட்டமாக மக்கள் வாழ்ந்த புஞ்சிரிமட்டம்... இப்போது வெறும் கல்லும் மண்ணும் மட்டுமே எஞ்சியிருக்கிறது...

நள்ளிரவில் முதல் நிலச்சரிவு நிகழ்ந்த போதே அங்கிருந்து கொஞ்ச பேர் மாற்று இடங்களுக்குச் சென்றதாகத் தெரிகிறது...

4 மணிக்கு 2வது நிலச்சரிவு நிகழ்ந்த போது அங்கு எத்தனை பேர் இருந்தனர்? எத்தனை பேர் இறந்தனர்? எத்தனை பேர் பிழைத்தனர்?...எதுவும் தெரியவில்லை...

அசாமைச் சேர்ந்த தொழிலாளிகள் உள்பட பலர் அங்கு தங்கி இருந்த நிலையில், அவர்கள் கதி என்ன ஆனது?... இதை எல்லாம் கேட்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது... 

Tags:    

மேலும் செய்திகள்