ஒரே வீட்டில் நடந்த மூன்று கொலைகள்... மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் பயங்கரம்...
சாலையில் கொக்கரித்த போராட்டக்காரர்களின் முழக்கம்.
கதவை உடைத்து மள்ளுகட்டிய கலவரக்காரர்கள், தடியடி நடத்தி அசம்பாவிதத்தை தடுத்த போலீஸ்... என அன்று அசாம் மாநிலத்தில் உள்ள கோலகட் சாலையின் இரவுகள் இப்படித்தான் கழிந்தன.
இவற்றுக்கெல்லாம் காரணம் இந்தி பள்ளி சாலையில் உள்ள இந்த குடியிருப்பில் ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 சடலங்கள்..
நடந்திருப்பது படுகொலை....கணவனே மனைவியையும், மாமனார் மாமியாரையும் வெட்டிக்கொலை செய்திருக்கிறார்.
கையிலே குழந்தையுடன் பேக்கை மாட்டிக்கொண்டு செல்லும் இவர் தான் அந்த பயங்கரத்தை நடத்திய கொடும்பாவி.
நடந்த கோரத்தை நேரலையில் கண்ட ஒரே சாட்சி இந்த கல்லூரி மாணவி மட்டும் தான்.
என்ன நடந்தது...? கணவனே மனைவியை கொல்ல காரணம் என்ன...?
கொல்லப்பட்டவர்கள் இதே பகுதியை சேர்ந்த சங்கமித்ரா கோஷ் அவரது தந்தை சஞ்ஜீவ் கோஷ் மற்றும் தாய் ஜூனு கோஷ்.
26 வயதான சங்கமித்ராவுக்கும் கொலையாளியான 32 வயதாகும் நஜீபூர் ரகுமானுக்கும் கொரோனா காலத்தில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட ஒரு ஃபேஸ்புக் குரூப்பில் தான் இருவரும் முதன் முதலில் அறிமுகமாகி உள்ளனர்.
சங்கமித்ராவின் மனதை கவர நஜீபூர் தன்னை ஒரு இந்து மதத்தை சேர்ந்தவர் என சொல்லி பழகி இருக்கிறார். தன்னை போலவே பிறருக்கு உதவ நினைக்கும் நஜீபூரின் அந்த நல்ல குணம் சங்கமித்ராவுக்கு காதல் மலர அடித்தளமிட்டுள்ளது.
இவர்களின் காதல் விவகாரம் ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரியவர, சங்கமித்ராவின் பெற்றோர்கள் காதலை கைவிடுமாறு கண்டித்திருக்கிறார்கள்.
பெற்றோரின் பேச்சை எல்லாம் செவி கொடுத்து கேட்க மறுத்த சங்கமித்ரா,காதலன் நஜிபூருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இருவரும் தனிமையில் வசித்து வந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் தான் நஜீபூர் ஒரு இஸ்லாமியர் என்ற உண்மை வெளிவந்துள்ளது. அங்கிருந்து தொடங்கிய பிரச்சனைகளில் நஜீபூரின் தவறான பழக்கங்கள், ஒவ்வொன்றாய் அம்பலமாகின.
வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்த பொருட்களை விற்று குடித்து கூத்தடித்திருக்கிறார். தட்டி கேட்ட சங்கமித்ராவை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
அந்த நேரத்தில் சங்கமித்ரா கருத்தரித்திருக்கிறார்.ஆனால் கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை அடித்து சித்ரவதை செய்வதை நஜீபூர் விடவே இல்லை. மேலும் கருவை கலைக்க முயற்சித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த மனைவி சங்கமித்ராவை உறங்கும் போது கொலை செய்ய முயன்றதாகவும் தெரிகிறது.
இனியும் இந்த அரக்கனுடன் வாழ முடியாது என்று முடிவு செய்த சங்கமித்ரா, கணவன் நஜீபூரின் மீது காவல் நிலையத்தில் கொலை முயற்சி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், நஜிபூரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
அதன்பிறகு சங்கமித்ரா தனது தாய் வீட்டிற்கே வந்து செட்டிலாகி ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். காலங்கள் உருண்டோட, கடந்த திங்கட்கிழமை அன்று நஜீபூர் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.
நேராக மனைவியையும் குழந்தையையும் பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கே கல்லூரியில் படிக்கும் தங்கையுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த சங்கமித்ராவை தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்திருக்கிறார்.
இனியும் அந்த நரகத்தில் வாழ விரும்பவில்லை என கணவனை வெறுத்து ஒதுக்கி இருக்கிறார். வாழ மறுத்ததோடு, குழந்தையையும் கண்ணில் காட்ட முடியாது என திட்ட வட்டமாய் கூறி இருக்கிறார் சங்கமித்ரா. இதனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி அது சண்டையில் முடிந்திருக்கிறது.
மனைவியின் பிடிவாதம் நஜீபூருக்கு ஆத்திரத்தை கிளப்ப அங்கிருந்த கத்தியால் சங்கமித்ராவை குத்தி கொலை செய்திருக்கிறார். இதனை தடுக்க வந்த மாமியார் மாமனாரையும் சரமாரியாக கிழித்து கொன்று போட்டிருக்கிறார்.
3 பேரையும் சரித்துவிட்டு 9 மாத கைகுழந்தையுடன் நேராக காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார் நஜீபூர்.
வீடியோ காலில் தனது குடும்பத்தினரை குத்தி கொலை செய்த கோரத்தை கண்ட அந்த கல்லூரி மாணவி, போலீசாரிடம் சாட்சி சொல்லி இருக்கிறார்.
நடந்திருப்பது லவ் ஜிகாத் என நினைத்த சிலர் குற்றவாளியை தண்டிக்க கோரி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
ஆதாரங்களின் அடிப்படையில் நஜீபூர் ரகுமானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.