சபரிமலையில் தானியங்கி கூரை அமைக்கும் விவகாரம் - விளக்கம் கேட்ட கேரள ஐகோர்ட்
சபரிமலையில் மழை நேரத்தில் படிபூஜை செய்வதில் சிரமங்கள் இருப்பதைக் கருதி, படியின் மேற்பகுதியில் தானியங்கி கூரை அமைக்க, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்தது. இதற்காக சிற்ப வேலைப்பாடுகளுடன் கற்சுவர் அமைக்கப்பட்ட நிலையில், அதை அப்புறப்படுத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, மாநில அரசிடம் விளக்கம் கேட்டது. இதுகுறித்து பதிலளிக்க கேரள அரசு அவகாசம் கோரியதை அடுத்து, வரும் 19-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க பத்தனம்திட்டை ஆட்சியர் மற்றும் எஸ்.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிலக்கல்லில் பாஸ்டேக் மூலம் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும்போது மின்சார தடையால் செயல்படாமல் உள்ளதை சரிசெய்யவும் அறிவுறுத்தினர்.