ஆந்திரா டூ மகாராஷ்டிரா.. மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தல்... சிக்கிய 2 குற்றவாளி
ஆந்திராவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு பீதர் வழியாக, கஞ்சா கடத்தப்படுவதாக, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாடு குழு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பீதர் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தினர். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற லாரியை, தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், சரக்குகளுக்கு இடையே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,596 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து பீதர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சென்ன பசவண்ணா லங்கோடி கூறுகையில், லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் கைது செய்யப்பட்டதாகவும், தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த ஜனவரியிலும், கஞ்சா கடத்தல் வழக்கில் இதே லாரி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பிப்ரவரி 14ல் நீதிமன்றம் மூலமாக லாரியை மீட்டு சென்றவர்கள் மீண்டும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.