ரேஷன் கடைகளாக மாறிய வகுப்பறைகள் - மரத்தடியில் கல்வி பயிலும் மாணவர்கள்

காரைக்காலில் பள்ளி வகுப்பறைகளில் வைத்து ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்து வருவதும், மாணவர்கள் மரத்தடியில் கல்வி பயில்வதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-02-06 04:16 GMT
புதுச்சேரியில் நிதி சுமை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் செலுத்துவது நிறுத்தப்பட்டு, ரேஷன் கடைகளும் மூடப்பட்டன.

இதனால் பல பகுதிகளில் பள்ளிகளை தற்காலிக ரேஷன் கடைகளாக மாற்றிய புதுச்சேரி அரசு, ஊழியர்கள் இல்லாததால் ஆசிரியர்கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகம் செய்தது. 

மத்திய அரசு அனுப்பும் அரிசி மூட்டைகளையும் பள்ளி வகுப்பறைகளிலேயே சேகரித்து வந்தது.

இந்த சூழலில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டாலும், வகுப்பறைகளில் உள்ள அரிசி மூட்டைகள் அங்கேயே உள்ளன. திருப்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் இதே நிலைதான்.

இதனால் சில பள்ளிகளில் வகுப்பறைகள் செயல்படாததால், மரத்தடியில் குழந்தைகள் பாடம் கற்பதும், ஒரு சில பள்ளிகளில் பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையும் நீடிக்கின்றன.

இது தொடர்பாக திருப்பட்டினம் பள்ளியில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ நாக தியாகராஜன், உடனடியாக ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என அரசை வலியுறுத்தினார்.

வகுப்பறைகள் மீண்டும் மாணவ மாணவிகளால் நிறைய வேண்டும். அரிசி வழங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பழையபடி மாணவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும். புதுவையைப் பொறுத்தவரை இதுவே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.




Tags:    

மேலும் செய்திகள்