"இயற்கை விவசாயத்திற்கு நாம் திரும்ப வேண்டும் " -பிரதமர் வேண்டுகோள்
மண்ணையும் வருங்காலத் தலைமுறையையும் பாதுகாக்க நாம், இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
மண்ணையும் வருங்காலத் தலைமுறையையும் பாதுகாக்க நாம், இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும், உத்தரப்பிரதேச மாநில தொழில் வளர்ச்சி ஆணைய உணவுப் பூங்காவில், 'பனஸ் பால் பண்ணைக்கு' பிரதமர் அடிக்கல் நாட்டினார். 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்தப் பால்பண்ணை சுமார் 475 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுவதுடன், தினந்தோறும் 5 லட்சம் லிட்டர் பாலை குளிரூட்டும் வசதிகளை பெற்றிருக்கும். மேலும் பனஸ் பால் பண்ணையுடன் தொடர்புடைய பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில், 35 கோடி ரூபாய் ஊக்கத்தொகையையும் பிரதமர் மோடி டிஜிட்டல் முறையில் செலுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,
இந்தியாவில் ஆண்டுக்கு எட்டரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பால் உற்பத்தி செய்யப்படுகிறது என்றார். இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியை விட பெருமளவு அதிகம் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். மண் மற்றும் வருங்கால தலைமுறையினரை பாதுகாக்க மீண்டும் இயற்கை விவசாயத்தை நோக்கி திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் விவசாய நண்பர்கள் இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.