"மனைவியிடம் அத்துமீறுவது பலாத்காரம் அல்ல" - சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு
18 வயது நிரம்பிய மனைவியிடம் கணவர் கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் தன்னிடம் வலுகட்டாயமாக உடலுறவுக்கொள்வதாகவும், உடலுறவின்போது இயற்கைக்கு முரணான வகையில் செயல்பட்டதாகவும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கணவர் மற்றும் கணவரின் தாயார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் அந்த பெண் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
பாலியல் பலாத்காரம் செய்தது, இயற்கைக்கு முரணான உடலுறவு கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் அந்த பெண்ணின் கணவருக்கு அமர்வு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை எதிர்த்து பெண்ணின் கணவர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதனை விசாரித்த நீதிபதி என்.கே.சந்திரவன்சி தலைமையிலான அமர்வு, 18 வயது நிரம்பிய மனைவியிடம் அவரது கணவர் உடலுறவு கொள்ளலாம் என சட்டம் கூறுவதாகவும், கணவர் கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டாலும் அது பாலியல் பலாத்காரம் ஆகாது எனவும் தெரிவித்தது.