"2 வயதுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்" - ஒரு டோஸ் மருந்தின் விலை 18 கோடி ரூபாய்
கேரளாவில் முதுகெலும்பு தசை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது சிறுவனுக்கு,18 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டது.
கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரபீக் மற்றும் மரியம் ஆகியோரின் ஒன்றரை வயது மகன் அனியன் முஹம்மது, முதுகெலும்பு தசைநார் சிதைவு என்ற நோய் பாதிப்பால், நடக்க முடியாமல் தவித்து வந்தான். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்தின் விலை, ஒரு டோஸ் 18 கோடி ரூபாய் என்றும், 2 வயதுக்குள் மருந்து செலுத்திக்கொண்டால் மட்டுமே, இந்த அரிய வகை நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான செய்தி கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வெளியாதனை அடுத்து, உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் சிறுவனின் சிகிச்சைக்கு நிதி அளித்தனர். இதுவரை 46 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ள நிலையில், சிகிச்சைக்கான மருந்து கடந்த மூன்று தினங்களுக்கு முன் அமெரிக்காவில் வாங்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு மருந்து செலுத்தப்பட்டது. தற்போது முஹம்மது பக்கவிளைவுகள் இன்றி ஆரோக்கியமாக இருப்பதாகவும், சிறுவனின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.