ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு - கொத்துக் கொத்தாக உயிரிழக்கும் கொரோனா நோயாளிகள்
ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு - கொத்துக் கொத்தாக உயிரிழக்கும் கொரோனா நோயாளிகள்
இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் கொத்துக் கொத்தாக உயிரிழக்கும் அவலம் ஏதோ ஒருபகுதியில் தொடர்கிறது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா 2-வது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியாவில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஆக்சிஜன், உயிர்காக்கும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
நுரையீரலில் தொற்று அதிகரிக்க தொடங்கும் போது, நோயாளிகளை காப்பாற்ற ஆக்சிஜன் அவசிய தேவையாகிறது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் ஒருநாள் ஆக்சிஜன் உற்பத்தி 700 மெட்ரிக் டன்னாக இருந்தது.
ஆனால் அது இப்போது 9 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்ந்து உள்ளது.
இதற்கிடையே சிங்கப்பூர், வளைகுடா நாடுகளும் இந்தியாவிற்கு ஆக்சிஜனையும் அனுப்பி வருகின்றன. மேலும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள், டேங்கர்களையும் உலக நாடுகள் வழங்கி வருகின்றன.
இருப்பினும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெறும் நிலையில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையே காணப்படுகிறது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவில் நாடு முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் தயாரிப்பு அதிகரித்து இருந்தாலும் தேவை உள்ள இடத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
போதிய டேங்கர், சிலிண்டர்கள் போன்ற மருத்துவ உபகரணம் இல்லாமையும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மத்திய, மாநில அரசுக்கள், இந்தியா விமானப்படை, கடற்படை, ரெயில்வே உதவியில் இறங்கியுள்ள நிலையிலும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் பெற உறவினர்கள் அலந்து திரிவதும், ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
கிராம புறங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் 2-ம் நிலை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கோவா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வினியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 26 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்று ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ருயா அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் சரியான நேரத்தில் கிடைக்காது 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து இறந்துள்ளனர்.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்திலும் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காது 7 கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர்.
அடுத்தடுத்து பறிபோகும் உயிர்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.