கொரோனா பரவலை தடுக்க தொடரும் ஊரடங்கு - சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் 55% குறைந்தது
சரக்கு மற்றும் சேவை வரி ஏப்ரல், மே மாதங்களில் 56 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால், பொருளாதார நடவடிக்கை முடங்கியதோடு சரக்கு மற்றும் சேவை வரி வசூல் மற்றும் பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதம் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 154 கோடி ரூபாய்க்கு பதிலாக, 94 ஆயிரத்து 323 கோடியாக உள்ளது. இது 56 சதவீதம் அளவுக்கு குறைவானது என நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பொருளாதார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் ஏப்ரல் மாதம் 32 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் விற்பனையாகி உள்ளது. கடந்த நிதியாண்டில் ஏப்ரல் மாதம் டீசல் விற்பனை 73 லட்சத்து 23 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்துள்ளது. இதேபோன்று மே மாதம், 54 லட்சத்து 95 ஆயிரம் மெட்ரிக் டன்னாக டிசல் விற்பனை இருந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் டீசல் விற்பனை 77 லட்சத்து 88 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்துள்ளது. பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி வசூல், டீசல் விற்பனை விரைவில் பழைய நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.