ஏப்ரல் 1 முதல் புதிய வரி விதிப்பு அமல்

தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

Update: 2020-03-14 19:08 GMT
39-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மொபைல் போன் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கான வரியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதேபோன்று, தீப்பெட்டிக்கான வரி 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளளதாகவும் அவர் கூறினார். 

விமான பராமரிப்பு, பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க  முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இது முழு உள்ளீட்டு வரிக்கடனை உள்ளடக்கியது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2018 -19 ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்பவர்கள் காலம் கடந்து தாக்கல் செய்யும் வருமான வரி கணக்கு, மற்றும் 2 வருடத்துக்கான நல்லிணக்க அறிக்கைக்கு அபராதத்தை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த புதிய வரி விகிதங்கள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், காலம் கடந்து ஜி.எஸ்.டி. வரி செலுத்தும் நிலையில், அந்த தொகைக்கு வரும் ஜூலை முதல் வட்டி விதிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கை பலப்படுத்தும் வகையில் கூடுதல் பணியாளர்கள் மற்றும் அதன் திறனை அதிகரிக்க இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நாடியுள்ளதாகவும், இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கை பலப்படுத்தி வரி வருவாயை அதிகரிப்பதுடன், வரி செலுத்தாமல் ஏமாற்றம் செய்வதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுப்பது எனவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்