அரசுப் பள்ளிகள் 6 ஆம் வகுப்பு வரை கட்டாய ஆங்கில கல்வி - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும்
ஆந்திராவில் அரசு பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி கட்டாயம் என்ற ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவிப்பு பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.
விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அடுத்த கல்வியாண்டில் இருந்து, 6 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் பயிற்று மொழியாகவும், தெலுங்கு, உருது ஆகியவை கட்டாய பாடமாகவும் கொண்டுவர உள்ளதாக அறிவித்தார். அடுத்த 4 ஆண்டுகளில் 10 ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கில வழிக்கல்வி அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு, முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, இன்றைய சவால் நிறைந்த உலகில் போட்டி போட ஆங்கிலம் கட்டாயம் என்றும், இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் தங்கள் வீட்டு குழந்தைகளை எந்த மொழியில் படிக்க வைத்தார்கள் என விளக்க வேண்டும் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.