87-வது விமானப்படை தின கொண்டாட்டம் : விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

இந்திய விமானப்படை தினமான இன்று, விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Update: 2019-10-08 07:54 GMT
இந்திய விமானப்படை தினமான இன்று, விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். விமானப்படையின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை தொடர்வதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் திறனை பறைசாற்றும் வகையில் வீடியோ ஒன்றை பிரதமர் மோடி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அண்டை நாடுகளில் நிலவும் சூழ்நிலை கவலைக்கு உரியதாக உள்ளதாக இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பததோரியா தெரிவித்துள்ளார். இந்திய விமானப் படை தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதை புல்வாமா சம்பவம் எடுத்துக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு எதிரான தீவிரவாதிகளின் நடவடிக்கைக்கு தண்டனை வழங்கும் வகையில், அரசியல் தலைமையின் செயல் உள்ளதாக தெரிவித்த அவர், தீவிரவாதிகளை கையாளும் அரசின் நடவடிக்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளதாக விமானப் படை தளபதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். 

இந்திய விமானப்படையின் 87-வது தொடக்க விழா கொண்டாட்டங்கள், தலைநகர் டெல்லி அருகே உள்ள காசியாபாத் ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்றது. இதில் பாலகோட் தாக்குதலில் முக்கிய பங்காற்றிய விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், மிக் பைசன் ரக விமானத்தை இயக்கினார். அவருக்கு பாதுகாப்பாக பாலகோட் தாக்குதலில் பங்கேற்ற 3 மிராஜ் 2000 ரக விமானங்கள், இரண்டு Su-30MKI  போர் விமானங்கள் பறந்து சென்ற காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவருவதாக அமைந்தது.
Tags:    

மேலும் செய்திகள்