பணி நீக்கப்பட்டவர்களை திரும்ப பணிக்கு சேர்க்கும் திட்டமில்லை - தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவு
போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வு வயதை 60ஆக உயர்த்துவது, அரசு ஊழியராக்குவது என்பது உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களை சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் பணிக்கு திரும்புமாறு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் பணிக்கு திரும்பாத ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த இடத்துக்கு புதியவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் திரும்ப சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் சந்திரசேகர ராவ் உறுதி படத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, போராட்டத்தை சமாளிக்க 2 ஆயிரத்து 500 பேருந்துகளை ஒப்பந்தம் செய்துள்ளதோடு, நான்காயிரத்து 114 தனியார் பேருந்துகளும் பொது போக்குவரத்தில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 10 ஆம் தேதி ஸ்டிரைக் தொடர்பாக பதிலளிக்குமாறு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.