ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பிக்க நீதிபதி மறுப்பு - தலைமை நீதிபதி அமர்வுக்கு விசாரணையை மாற்றி உத்தரவு

ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது உடனடியாக உத்தரவு பிறப்பிக்க இயலாது என உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்ததோடு மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-08-21 07:33 GMT
ஐ.என்.எக்ஸ்.மீடியா தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை  சி.பி.ஐ. கைது செய்ய விதித்த இடைக்கால தடையை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று பிற்பகல் 3 மணிக்கு விலக்கிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா முன்பு, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீது உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதி ரமணா மறுத்துவிட்டார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பது தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வு முடிவு செய்யும் என கூறி, மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.உடனடியாக சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க இயலாது என்றும், இதில் சட்டவிரோத பணபரிவர்த்தனை மிகவும் அதிக அளவில் நடைபெற்றுள்ளதாகவும் நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவும் சிதம்பரத்தின் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி ரமணா அறிவுறுத்தி உள்ளார். இதனிடையே, 5 நீதிபதிகள் அடங்கிய தலைமை நீதிபதி அமர்வில், அயோத்திவழக்கு விசாரணை தொடங்கி விட்டதால், நீதிபதி ரமணா உத்தரவு தொடர்பாக, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரான கபில்சிபல் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட முடியவில்லை.இதனிடையே, ப.சிதம்பரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளன. தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் முன்ஜாமின் மனு மீது முடிவு எடுக்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்