டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வருகை
ப.சிதம்பரத்தின் டெல்லி வீட்டிற்கு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நிராகரித்தது. இதையடுத்து, அவரிடம் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க களமிறங்கியுள்ளது. நேற்றிரவு இரண்டு முறை சி.பி.ஐ. அதிகாரிகள் சிதம்பரம் வீட்டுக்கு சென்ற நிலையில், அவர் இல்லாததால், 2 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரான, ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர், தங்கள் தரப்புக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ் சட்டத்துக்கு உட்பட்டு இல்லை என்று சுட்டிக்காட்டியதுடன், இன்று காலை உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற உள்ள நிலையில், சிதம்பரம் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், இன்று காலை மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டிற்கு வந்தனர். அவர் இல்லாததால் சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.