தெலங்கானா : பொம்மை துப்பாக்கியை காட்டி ரூ.3.6 கோடி கொள்ளை
பொம்மை துப்பாக்கியைக் காட்டி, தங்க நகை வியாபாரிக்கு சொந்தமான சுமார் மூன்றரை கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற 7 பேரை தெலங்கானா போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் தங்க நகை வியாபாரி ராஜூ நங்ரே. அவர், கேரளாவில் இருந்து குறைந்த விலையில் தங்கம் வாங்கி வந்து, அவற்றை பெங்களூரு, மைசூரு, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் அதிக விலைக்கு விற்று வந்துள்ளார். ராஜூ நங்ரேவின் பணபுழக்கத்தையும், ஊழியர்களை நம்பி வேலைகளை ஒப்படைப்பதையும் அறிந்த, ஊழியர்களில் ஏழு பேர், பெரும் தொகையை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ராஜூ நங்ரேவிடம் வேலை செய்த மயூரேஷ் என்பவர் கடந்த மாதம் தங்கம் வாங்குவதற்காக 3 கோடியே 67 லட்சம் ரூபாயுடன் கேரளாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இதையறிந்த 7 பேரும் ஹைதராபாத் அருகே காரை மடக்கி, துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தெலங்கானாவில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில், கொள்ளையர்கள் 7 பேரையும் ஹைதராபாத்தில் சுற்றி வளைத்து கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 கோடியே 89 லட்சம் ரூபாய், 350 கிராம் தங்க நகைகள் ஆகியவற்றை கைப்பற்றினர். கொள்ளையர்கள் பயன்படுத்திய கார், விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், பொம்மை துப்பாக்கியையும் கைப்பற்றினர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், பொம்மை துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்தாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடந்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த சம்பவத்தில் வேறு ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஊழியர்களே, எஜமானரிடம் கொள்ளையடித்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி ஓய்ந்துள்ளது.