இந்தி எதிர்ப்பில் கடந்த காலத்தின் வரலாற்று பின்னணி...

மொழி விவகாரத்தில் நேருவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன.

Update: 2019-06-07 09:39 GMT
இந்தியா சுதந்திரம் பெற்று, அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கியபோது, இந்தியை தேசிய மொழியாக்க பரிந்துரை செய்யப்பட்டது. அப்போது இந்தி பேசாத மாநிலங்களில் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதற்கு தமிழக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலங்களை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, இந்தி மட்டுமே அலுவல் மொழியாக ஏற்கக்கூடாது, ஆங்கிலம் தொடர வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் திணிக்கக்கூடாது என்றும் வாதிட்டார். 

அதைத் தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பி ஏற்கும் வரை ஆங்கிலம் தொடரலாம் என்றும், இந்தி திணிக்கப்படாது என்று அப்போதைய பிரதமர் நேரு வாக்குறுதி அளித்தார். நேரு இறந்த பின்னர், நிலைமை மாறியது. 1965 ஆம் ஆண்டில், இந்தியை அரசு மொழியாக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கோண்டது. தமிழகம் கடும் எதிர்ப்பலைகளால் திரண்டது. மாணவர்கள் தன்னிச்சையாக களத்தில் இறங்கினர். திமுக முக்கிய கட்சியாக களத்தில் நின்றதுடன், தமிழகம் போராட்டங்களால் முடங்கியது. போராட்டத்தின் விளைவால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. பின்னர் ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுகவின் அழுத்ததால் 1967 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இருமொழிக் கொள்கையே தொடரும் என அறிவித்தார். அதன்பின்னர் பள்ளிகளில் விருப்பப் பாடமாக இருந்த இந்தி விலக்கி கொள்ளப்பட்டது.

தற்போது , தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் பொதுமக்கள் கேட்கும் பட்சத்தில் தமிழிலேயே பதில் தரவேண்டும் என்கிற நிலை உள்ளது. 1964 ஆம் ஆண்டில் நேரு அளித்த வாக்குறுதியும், 1968 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி ஏற்றுக் கொண்ட இருமொழிக்  கொள்கையும் இன்றும் தொடர்கிறது. ஆனால் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 22 மொழிகள் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளன, ஆனால் தேசிய மொழி என்று எதுவும் இல்லை. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான தொடர்பு மொழியாக ஆங்கிலம், இந்தி பயன்படுத்தப்படுகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் உரிமை கேட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தலைமை நீதிபதி நிராகரித்து விட்டார். கீழ் நீதிமன்றங்களில் தமிழில் வாதிடலாம். உச்ச நீதிமன்றத்தில் ஆங்கிலம் மட்டுமே பயன்பாட்டு மொழியாக உள்ளது.

இந்நிலையில் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரி மொழிக்கொள்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் 4 மொழிகளும், தென்னாப்பிரிக்காவில் 11 மொழிகளும் ஆட்சி மொழிகளாக உள்ளன. சுவிட்சர்லாந்தில் 4 மொழிகள் ஆட்சி மொழிகளாக இருப்பதுடன், அதன் தேசிய கீதம் பல மொழிகளின் கலப்பாக உள்ளது. அமெரிக்கா என்பது பல மொழி பேசும் சர்வதேச மக்கள் சேர்ந்து உருவான நாடு. அங்கு ஆங்கிலம், ஜெர்மனி, பிரெஞ்சு, சைனீஸ், ஆப்பிரிக்க, ஜப்பான், ஸ்பானிஸ், யூதமொழி என பல மொழியினர் வாழ்ந்தாலும், ஆங்கிலம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி மொழியாக ஏற்கப்பட்டுள்ளது. பிரான்சில் பல மொழி பேசுபவர்கள் இருந்தாலும், பிரெஞ்சு மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ளது. இத்தாலியில் பல மொழியினர் இருந்தாலும், இத்தாலி மட்டுமே ஆட்சி மொழியாகும். ஜெர்மனியில் பல மொழியினர் வசித்தாலும், ஜெர்மன் மட்டுமே ஆட்சி மொழியாக உள்ளது

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் தமிழும் ஒரு ஆட்சி மொழியாக உள்ளது. ரீயூனியன், செசல்ஸ், கனடா போன்ற நாடுகளில் தமிழ் பண்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது அதேநேரத்தில் தமிழர்கள் ஆங்கிலத்தில் கொண்ட புலமையின் காரணமாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்பும், தொழில் வர்த்தக உறவுகளையும் வளர்த்துள்ளனர். கடந்த காலங்களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிர் துறந்துள்ளனர். சிறை, போராட்டங்கள் என வாழ்க்கையை துறந்துள்ளனர். அவர்களின் தியாகங்கள் தமிழை காப்பதற்காகவே என்பதை தமிழர்கள் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
Tags:    

மேலும் செய்திகள்