200 ஆண்டுகளுக்கு முன்னரே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி இல்லை - ஆங்கிலேயர்களின் ஆவணத்தில் தகவல்
சபரிமலையில் 200 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் ஆங்கிலேயர்களின் ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வரையிலான வயதுடைய பெண்கள் செல்லலாம் என கடந்த செப்டம்பர் மாதத்தில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.தீர்ப்புக்கு ஆதரவாக சிலரும், எதிராக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கோவிலுக்குள் செல்ல முற்பட்ட பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 200 ஆண்டுகளுக்கு முன்னர், திருவாங்கூர் சமஸ்தானத்தில், தளபதிகளாக பணிபுரிந்து வந்த Benjamin Swain Ward மற்றும் Peter Eyre Conner ஆகியோர், "Memoir of the Survey of the Travancore and Cochin States" என்ற தங்களது ஆவணத்தில் சபரிமலை பற்றிய குறிப்புகளை பதிவு செய்துள்ளனர்.
அதில், சபரிமலை கோவில் குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, சபரிமலைக்கு பருவமடைந்த பெண்கள் யாரும் வருவதில்லை. அப்படி யாராவது வந்தால், அவர்களுக்கு அனுமதியும் வழங்கப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணம் 1820-ம் ஆண்டுவாக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்னரே, சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.