உலகிலேயே பெண் விமானிகள் அதிகம் உள்ள நாடு இந்தியா
உலகளவில் இந்தியாவில் தான் பெண் விமானிகள் அதிகமாக உள்ளனர். இது சர்வதேச சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.
உள்நாட்டு விமான போக்குவரத்து துறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக பெண் விமானிகளில் 12 சதவீதத்தினர் இந்தியாவில் தான் உள்ளனர். அடுத்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 7 லட்சத்து 90 ஆயிரம் விமானிகள் தேவைப்படுவதாக போயிங் நிறுவனம் கணித்துள்ளது. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள அதிக சாத்தியக் கூறு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய பெண் விமானிகளுக்கு வாய்ப்பு அதிகம் என்றும், விமானிகளுக்கான ஊதியத்தில் பாலின பாகுபாடு இல்லாதது, பெண்கள் அதிகளவில் இந்த பணியை விரும்புவதற்கு காரணம் என கூறப்படுகிறது. விமானிகள் ஊதியம் பயிற்சி நேரம் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. விமானிகளுக்கான படி உள்ளிட்ட தொடக்க நிலை ஊதியம் வணிக வழக்குகளுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் மற்றும் கட்டடக்கலை நிபுணர்கள் ஊதியத்துக்கு இணையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அதிகமானோர் விமானி பணிக்கு விருப்பம் கொள்வது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தினரில் பெண்களின் பங்கேற்பு சதவீதம் குறைவாகவும், நிகர உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதம் அளவுக்கே பெண்களிக் பங்களிப்பு உள்ள நிலையில், விமானத் துறையில் பெண் விமானிகளின் வருகை சர்வதேச சராசரியை விட அதிகரித்து வருவது ஆச்சரியமான வளர்ச்சி என கருதப்படுகிறது.