ஆளுநர் மாளிகையில் நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை- ஆளுநர் பன்வாரிலால் வருத்தம்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், நீதிபதிகளுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை என்ற புகார் தொடர்பாக, தலைமை நீதிபதி தஹில் ரமானியிடம் ஆளுநர் பன்வாரிலால் வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Update: 2018-08-16 08:02 GMT
சென்னை ஆளுநர் மாளிகையில், கடந்த 12 -ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தஹில் ரமானியின் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு,  முன் வரிசையில் இடம் ஒதுக்காமல், பின் வரிசையில் இடம் ஒதுக்கியதாக  சர்ச்சை எழுந்தது. 

இது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின தேநீர் விருந்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. 

ஆனால், தலைமை நீதிபதி உள்ளிட்ட 6 உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின தேநீர் விருந்தில் கலந்து கொண்டதகா புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

தேநீர் விருந்துக்கு தலைமை நீதிபதி தஹில் ரமானியை அழைப்பதற்காக நேரில் சென்ற, ஆளுநரின் செயலாளர் ராஜகோபால், அவரிடம் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

பின்னர், தலைமை நீதிபதியை தொலைபேசி மூலம் ஆளுநர் பன்வாரிலால் தொடர்பு கொண்டு, நீதிபதிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்ட விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்ததாக உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்