மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி காலமானார். 89 வயதாகும் சோம்நாத் சட்டர்ஜிக்கு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தது. இதனால், கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சோம்நாத், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சோம்நாத் மறைவுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
முன்னாள் சபாநாயகரும், முதுபெரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமது சமூக வலைதள பக்கத்தில், சட்டர்ஜியின் மறைவு மேற்கு வங்கம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக ராம்நாத் தெரிவித்துள்ளார்.
Sorry to hear of the passing of Shri Somnath Chatterjee, former Speaker of the Lok Sabha and a veteran parliamentarian who had a forceful presence in the House. A loss for public life in Bengal and India. My condolences to his family and innumerable well-wishers #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) August 13, 2018
சோம்நாத் சட்டர்ஜிக்கு, பிரதமர் மோடி இரங்கல்
முன்னாள் எம்.பி.யும், சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி, இந்திய அரசியலில் முக்கிய நபர் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடும்போது, நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை மேன்மைபடுத்தியதாகவும், அவர் ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிமையாக குரல் எழுப்பியதாகவும் கூறியுள்ளார். சோம்நாத் சட்டர்ஜியின் மறைவு பேரிழப்பு என குறிப்பிட்டுள்ள மோடி, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Former MP and Speaker Shri Somnath Chatterjee was a stalwart of Indian politics. He made our Parliamentary democracy richer and was a strong voice for the well-being of the poor and vulnerable. Anguished by his demise. My thoughts are with his family and supporters.
— Narendra Modi (@narendramodi) August 13, 2018
சோம்நாத் மறைவுக்கு அன்புமணி இரங்கல்
நாடாளுமன்ற மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் மறைவுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். 10 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் சோம்நாத் என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
சோம்நாத் மறைவுக்கு ஜி.கே.வாசன் இரங்கல்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மூப்பனாரிடம் பெரிதும் அன்பு பாராட்டியவர் சோம்நாத் என வாசன் கூறியுள்ளார்.
சோம்நாத் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஆரோக்கியமான அரசியல் கருத்துகளுக்கும், ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும் நாடாளுமன்றத்தில் இடம் கொடுத்து, ஜனநாயக மரபுகளை பாதுகாத்த மிகச்சிறந்த தலைவரின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என அவர் கூறியுள்ளார்.
சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்
சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதங்களில் கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைப்பதில் பெயர் பெற்ற சோம்நாத் மறைந்த செய்தி அறிந்து வேதனைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு சரத்குமார் இரங்கல்
சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 40 வருட பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரரான சோம்நாத் சட்டர்ஜி, 1996ம் ஆண்டில் சிறந்த எம்.பி.க்கான விருதை பெற்றவர் என கூறியுள்ளார்.