ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சட்ட விரோதமாக எரிவாயுவை எடுத்தது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-08-03 08:33 GMT
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள கே.ஜி. 6 என்ற பெட்ரோலிய வயல், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு அடுத்து உள்ள பகுதி மத்திய அரசு நிறுவனமான ஒ.என்.ஜி.சி-க்கு ஒதுக்கபட்டுள்ளது. ஒ.என்.ஜி.சி. நிறுவன எண்ணை வயல்களில் இருந்து எரிவாயு, கடலின் அடிப்பகுதி வழியாக ரிலையன்ஸ் நிறுவன எண்ணை வயல்களுக்கு கசிந்ததால், அந்த நிறுவனம் பெரும் லாபம் அடைந்ததாக, 2016 -ல் ஏ.பி.ஷா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டது. இந்த அறிக்கை அடிப்படையில், மத்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 10 ஆயிரத்து 642 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு சிங்கப்பூரில் அமைக்கபட்ட சர்வதேச தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது. சிங்கபூர் பல்கலை கழக பேராசிரியர் Lawrence Boo, இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மற்றும் இங்கிலாந்து முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பெர்னார்ட் எடர் ஆகியோர் அடங்கிய  அமர்வு, மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழக்கு  செலவாக 56 கோடியே 44 லட்சம் ரூபாய் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்