"தாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை மாசு காரணமாக, தாஜ்மகால் நிறம் மாறி வருவதாகவும் அதனை பாதுகாக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு,உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன்.பி.லோக்கூர் தலைமையிலான அமர்வு,தாஜ்மகாலை பராமரிப்பது, மத்திய சுற்றுச்சூழல் செயலாளர் மற்றும் ஆக்ரா நகர ஆணையருக்கு உட்பட்ட செயல் என கூறினார்.
மேலும், தாஜ்மகாலை,மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மாசு காரணமாக யூனெஸ்கோ அந்தஸ்தை இழந்து விடும் என்பதை தாண்டியும், தாஜ்மகாலை பாதுகாப்பதை நமது கடமை என்பதையும் மத்திய அரசு உணர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.