மிருதங்க வித்வான் உருவாக்கிய இசைக்கருவி
எடை குறைந்த இசைக் கருவியை பிரபல மிருதங்க வித்வான் உருவாக்கியுள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள, குழல் மன்னம் என்ற கிராமத்தில், எளிய இசைக் குடும்பத்தில் பிறந்தவர் ராமகிருஷ்ணன்... தந்தை கோபால கிருஷ்ணனிடம், முறைப்படி இசையைக் கற்றுக் கொண்ட இவர், தமது 10வது வயதில், செம்பை கிராமத்தில் மேடைஏறினார். இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைக் கச்சேரியில், இவர் மிருதங்கம் வாசித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு, தொடர்ந்து 101 மணி நேரம் மிருதங்கம் வாசித்து, உலக சாதனை நிகழ்த்தினார். இவரது இந்த சாதனை 2008-ஆம் ஆண்டு முறியடிக்கப்பட்டது. தமது முந்தைய சாதனையை முறியடித்ததும் இவரே தான்.கடந்த 2008ம் ஆண்டு, இரவு - பகலாக தொடர்ந்து, 300 மணி நேரத்திற்கும் மேலாக, மிருதங்கம் வாசித்து, கின்னஸ் சாதனையில் இடம் பெற்றார்.
மிருதங்க வித்வானான இவர், தற்போது, 5 கிலோ எடையில், 'Sadmridangam' என்ற இசைக் கருவியை உருவாக்கியுள்ளார். இதற்கு, காப்புரிமை கோரி, மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார். இலகுவான இந்த இசைக் கருவி, டிரம்ஸ் வகையைச் சேர்ந்தது. இதன், விலையும் குறைவாக இருக்குமென, அவர் தெரிவித்துள்ளார். இசைக்கலைஞர்கள் கையாள எளிதாக இருக்கும் என்றும், மிருதங்கத்தை கையாளுவதில் ஏற்பட்ட சிரமத்தை உணர்ந்ததால், இதனை உருவாக்கியதாவும் தெரிவித்துள்ளார். பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மிருதங்கம், சுமார் 15 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஆனால், இவர் உருவாக்கியுள்ள இந்த மிருதங்கம், 5 கிலோ எடை கொண்டது. 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மிருதங்கத்தின் விலை இருக்கும் போது, இது, மூன்றில் ஒரு பங்கு விலையை கொண்டதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு, 'Sadmridangam' எனப் பெயரிட்டுள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக மிருதங்க வித்வானாக கோலோச்சி வரும், ராம கிருஷ்ணன், தமது படைப்பான புதிய இந்த இசைக்கருவி போல, மேலும் சில இலகுவான இசைக்கருவிகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்.