"விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டியில், கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு, கட்டட உரிமையாளர்கள் 5 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நீலாங்கரை முதல் மாமல்லபுரம் வரையுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பங்களாக்கள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கிழக்கு கடற்கரை சாலையில், சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக, நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மோகன் வாதிட்டார்.
கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர். விதிகளை மீறி கட்டடம் கட்டியவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கும், பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.