"25 வருடம் என் வாழ்க்கையே போச்சு" - வாழை கிளைமாக்ஸின் உயிர் சாட்சியாக பனிமாலா

Update: 2024-08-28 10:14 GMT

உயிரின் வலியை உணர்த்தும் `வாழை’

இந்த உலகையே சுற்றும் ஆசை இருந்தும்

25 வருடம் என் வாழ்க்கையே போச்சு"

கிளைமாக்ஸின் உயிர் சாட்சியாக பனிமாலா


உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நிஜமாகவே நடந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்த பெண்ணின் உருக்கமான பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..


இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உருக்கமான வரவேற்பை பெற்று வருகிறது..


பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், உள்ளிட்ட படங்களின் வரிசையில் வாழையும் மிகுந்த வரவேற்பை பெற்ற படமாக இணைந்துள்ளது..

மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் வாழை.

படத்தில், வாழைத்தார் ஏற்றிச் செல்லும் லாரி கவிழ்ந்து அதன் மேல் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்த சம்பவம் தான் படத்தின் மையக்கரு.

படத்தில் காண்பித்துள்ளது போலவே, நிஜமாகவே நடந்த விபத்தில், மாரி செல்வராஜின் சொந்த ஊரான புலியங்குளத்தை சேர்ந்த 15 பேர், நாட்டார்குளத்தை சேர்ந்த 4 பேர் என 19 பேர் உயிரிழந்தனர்.

இதில் ஏராளமானோர் படுகாயங்களோடு தப்பினர். அதில் தனது இரண்டு கால்களை இழந்து 20 வருடங்களுக்கு மேலாக போராடி வரும் பனிமாலாவும் ஒருவர்....

தனது வாழ்க்கையில் நடந்த கோர விபத்தை படமாக பார்த்த அவர், விபத்து காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளதாக உருக்கத்துடன் தெரிவித்தார்...

இந்த கோர விபத்தில் தான் தனக்கு கால் பறிபோனது எனக் கூறிய பனிமாலா, கடவுள் தன்னை மட்டும் ஏன் இத்தனை ஆண்டுகளாக வைத்துள்ளார் என வேதனை தெரிவிக்கிறார்...

அதிலும் விபத்து நடந்த 3 மாதத்திற்கு தனது இரண்டு காலும் எடுக்கப்பட்டதே தெரியாது என அவர் கூறியது தான் துயரத்தின் உச்சம்....

இத்தனை வேதனையையும் கொட்டித்தீர்த்த பனிமாலா, வாழை படத்தை தத்ரூபமாக, உருக்கத்துடன் எடுத்திருப்பதாக மனம் நெகிழ்ந்து கூறினார்.

வலியும், வேதனையும் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை மேற்கொண்டு வருவதாக கூறும் பனிமாலா, அந்த ஒரு விபத்தால் 25 ஆண்டு கால வாழ்க்கையை தொலைத்து வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் என்பது பலரையும் வேதனையுறச் செய்துள்ளது..

வாழை படம் பல்வேறு தரப்பினரிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் சூழலில் இன்றும் அந்த சம்பவத்தின் சாட்சியாக இருப்போருக்கு உதவிக்கரம் நீண்டால் அவர்களுக்கும் வாழ்க்கை வளம்பெறும்.. 

Tags:    

மேலும் செய்திகள்