இந்தியன் 2 திரைப்படம் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு இடைவேளையில் காத்திருந்த அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ரெமி திரையரங்கம் இயங்கி வரும் நிலையில், அங்கு இந்தியன் 2 படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இடைவேளையின் போது, ரசிகர்கள் அங்கிருக்கும் உணவு பொருளை வாங்கி சாப்பிட்டனர். அப்போது உணவுப்பொருளில் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பாப்கான், சீஸ் உள்ளிட்டவை காலாவதியான தேதிக்கு பின்பும் பயன்படுத்தப்பட்டதை கண்டறிந்தனர். இது குறித்து திரையரங்க நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் தரவில்லை. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படம் நிறுத்தப்பட்டு 20 நிமிடம் ஆன நிலையில், அனைவருக்கும் டிக்கெட்டிற்கான பணம் திருப்பி அளிக்கப்பட்டது. மேலும், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மேலாளரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வில் ஈடுபட்ட நிலையில், காலாவதியான பொருள்களை கைப்பற்றி அழித்தனர்.