அதிர்வலையை கிளப்பிய விவகாரம் - "பாதுகாப்பான சூழல் இல்லை" - கேரள அரசு வெளியிட்ட பகீர் அறிக்கை
கேரளாவில் நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், திரைத்துறையில் பணியாற்றும் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய, நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கமிட்டி, 2019-ஆம் ஆண்டு அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்தது. அதில் நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்கள் இருப்பதால், நான்கரை ஆண்டுகளாக மாநில அரசு வெளியிடாமல் இருந்தது. சர்ச்சைக்குரியவற்றை தவிர்த்து விட்டு பிற விஷயங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் உரிமை ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் ஹேமா கமிட்டியின் அறிக்கையை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 8 பேருக்கு கேரள அரசு நகலை வழங்கியுள்ளது. மொத்தம் 233 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த அறிக்கையில், சில பக்கங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அதில் மலையாள சினிமாவில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் அடங்கிய குழு ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.