தமிழ் சினிமா ரசிகர்களை தனது வசீகர குரலால் கவர்ந்த பாடகர் மனோவின் பிறந்தநாள் இன்று.
பாடகர், பின்னணிக் குரல் கலைஞர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டு வலம் வந்த மனோ குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே.. செண்பகமே.. பாடலை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா..? தனது மெல்லிய வசீகர குரலால் தமிழ் நெஞ்சங்களை கட்டிப்போட்ட பாடகர் மனோ, ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் நாகூர்பாபு.
சிறு வயது முதலே இசை மீது தீரா ஆர்வம் கொண்டிருந்த மனோ, முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று சினிமாவில் பாட வாய்ப்பு தேடி வந்தார். இதனிடையே, தெலுங்கு சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடிகராகவும் வலம் வந்தார்.
நீண்ட போராட்டத்திற்கு பின், இசையமைப்பாளர் எம்.எஸ் விசுவநாதனிடம் உதவியாளராக சேர்ந்த மனோ, பல முன்னணி பாடகர்களுக்கு டிராக் பாடல்களை பாடி வந்தார். இவரது திறமையை கண்ட இசையமைப்பாளர் இளையராஜா, நாகூர் பாபுவை "மனோ" என பெயர் மாற்றி,
பூவிழி வாசலிலே படத்தில் பாடகராக அறிமுகப்படுத்தினார். அன்று தொடங்கிய மனோவின் இசைப்பயணம், இன்று வரை சாதனை பல புரிந்து வருகிறது..
தொடர்ந்து இளையராஜா இசையில், மனோ பாடிய பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. மனோவின் பாடல்களில், பாடகர் எஸ்.பி.பியின் சாயல் அதிகமாக இருப்பதை உணர முடியும்... அதே வேளையில், மனோவின் வளர்ச்சியில் அவரைவிட அதிக அக்கறை காட்டியவர் பாடகர் எஸ்.பி.பி. தான்...
இளையராஜாவை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், போன்ற பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடல்களை பாடியுள்ளார் மனோ...
பல பாடல்களை குரல் மாற்றி பாடுவதிலும் வல்லவரான மனோ.... பாடிய முக்காலா, முக்காபுலா பாடல், உலகெங்கும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது என்றே சொல்லலாம்.
பாடகராக மட்டுமல்லாமல் பல படங்களில் நடிகராகவும் வலம் வந்தார் மனோ. முக்கியமாக கமல்ஹாசனுடன் அவர் நடித்த சிங்கார வேலன் படம் இன்றளவும் பலரது பேவரைட்.
இது தவிர, தமிழ் படங்கள் தெலுங்கு மொழியில் டப் செய்யப்படும்போது, ரஜினி, கமல் கதாபாத்திரங்களுக்கு மனோதான் டப்பிங் பேசுவார். இசை உலகில், கடந்த 38 வருடங்களாக தவிர்க்க முடியாத அங்கமாக இருந்து வரும் மனோ, 15 மொழிகளில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை புரிந்துள்ளார்.
இவரது திரைப்பயணத்தை அங்கீகரிக்கும் விதமாக, ரிச்மண்ட் கேப்ரியல் யுனிவர்சிட்டி, கடந்த ஏப்ரல் மாதம், மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடும் பாடகர் மனோவின் சாதனை பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்..
--தந்தி செய்திகளுக்காக பிரகாஷ்