ரோசாப்பூ..சின்ன ரோசாப்பூ.. பாடலை எழுதியவர் தற்கொலை-வருஷமெல்லாம் வசந்தம் படத்தை இயக்கிய ரவிசங்கர்
காதலிக்காக காதலன் உருக உருக பாடிய பாடலை எப்படி மறக்கும் இந்த திரையுலகம்...
இப்படிப்பட்ட பாடல் வரிகளை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்தவர் தான் ரவிசங்கர்...
அதே போல் வானத்தை போல படத்தில் மைனாவே மைனாவே பாடல், ஒரு தேவதை வந்து விட்டாள், எங்கே அந்த வெண்ணிலா உள்ளிட்ட பாடல்களையும் எழுதியவர்..
பிரியமுடன் திரைப்படத்தில் பாரதிக்கு கண்ணம்மா பாடல், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் காற்றுக்கு தூது விட்டு, சூரியனே கண்ண துடைச்சிக்க போன்ற பாடல்களை எழுதியவர்..
இப்படி 90களில் தனது பாடல் வரிகளால் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளைக் கொண்ட ரவி சங்கருக்கு பாடலாசிரியர் மட்டுமல்ல, இயக்குநர் என்ற அடையாளமும் உண்டு...
வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படம் மூலம் இயக்குநராகவும் அறியப்பட்டவர்..
இப்படத்திற்கு பிறகு அவருக்கு வேறு எந்த படத்தையும் இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், இயக்குநர் விக்ரமனிடம் பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்ததும், நடிகர் பாக்யராஜ் நடத்தி வந்த 'பாக்யா' எனும் வார இதழில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
இப்படி தமிழ் திரைத்துறைக்கு பொக்கிஷங்களை அள்ளிக்கொடுத்த ரவிசங்கரின் தனிப்பட்ட வாழ்க்கை மிக சிறப்பானதாக அமையவில்லை என்றே சொல்லலாம்..
ரவிசங்கர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், சென்னை கே கே நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்..
இவரின் சகோதரி ராதா மும்பையிலும், சகோதரர் ஹரிஹரன் நியூசிலாந்திலும் வசித்து வருகின்றனர்.
இதனிடையே ரவிசங்கர் வெர்ட்டிகோ நோயால் மிகுந்த அவதிப்பட்டு வந்தார். ஆனால் இந்த நோய்க்கு உரிய முறையில் அவர் சிகிச்சை பெறவில்லை என்றும் கூறப்படுகிறது..
வெர்ட்டிகோ நோயால் அடிக்கடி தலை சுற்றி கீழே விழுந்த அவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தான் அவரின் நிலை அவரை விபரீத முடிவுக்கு தள்ளியுள்ளது. 63 வயதான ரவிசங்கர் வீட்டிற்குள் சென்று விட்டு நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை..
இதனால் பதறிய அக்கம்பக்கத்தினர் கேகே நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கதவை உடைத்து பார்த்த போது, தூக்கு மாட்டியபடி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார் ரவிசங்கர்.
இந்நிலையில் அவர் எழுதிய கடிதமும் கிடைத்தது..தான் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியதில்லை, வீட்டு உரிமையாளருக்கு பணம் கொடுக்க வேண்டும்.. ஆட்டோ ஓட்டுநருக்கு நன்றி என உருக்கத்துடன் எழுதியுள்ளார்.
மேலும் தன்னால் உடல் நல கோளாறுடன் வாழ இயலவில்லை எனவும் கடந்த ஜனவரி மாதமே தற்கொலை முயற்சி செய்ததாகவும் தனது மரணத்திற்கும் இதைத் தவிர வேற காரணம் இல்லை எனவும் மன்னித்து விடு அக்கா என எழுதி வைத்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தில் உள்ள அவரது அண்ணன் விமானம் சென்னை வந்ததும் உடற்கூராய்வு நடைபெறும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதில் சோகம் என்னவென்றால், இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் திகழ்ந்த ரவி சங்கர் உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்காக கண்ணீர் வடிக்க ஒருவர் கூட அங்கு வரவில்லை...