வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதால், ஜெயிலர் படத்துக்கு வழங்கப்பட்டுள்ள 'யுஏ' சான்றிதழை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கத்தி, ரத்தம், வெட்டு, துப்பாக்கி சூடு போன்ற வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், 12 வயதுக்கு குறைவானவர்களும் பார்க்கும் வகையிலான "யுஏ" சான்றிதழ் வழங்கியிருப்பது தவறானது என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் இந்த படத்திற்கு, 'ஏ' சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இதனால், ஜெயிலர் படத்திற்கு ஜூலை 27ல் வழங்கப்பட்ட "யுஏ" சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு முடியும் வரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.