கமல். ரஜினி வழியில் அரசியலுக்கு வருகிறாரா விஜய்...?

கமல், ரஜினியை தொடர்ந்து அரசியல் களத்தில் இறங்குவாரா விஜய்..?? அவரது செயல்பாடுகள் குறித்து ஒரு செய்தித் தொகுப்பு

Update: 2018-06-23 05:31 GMT
தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியிருக்கிறார் ரஜினி.... . நடிகர் விஜய் ரசிகர்களோ ஒரு படி மேலே போய், 'விஜய் மக்கள் இயக்கம்' என நீண்ட காலமாக நடத்தி வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு, தங்கள் தலைவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது தான். அதற்கு ஏற்றவாறே, சமீப காலமாக விஜய் படங்களில் அரசியல் நெடி, மிக அதிகமாகவே வீசுகிறது.   

2013ம் ஆண்டு வெளியான 'தலைவா' படத்தில் மும்பை வாழ் தமிழர்களின் தலைவராக விஜய் நடித்திருந்தார், 'தலைவா' வெளியானபோது, அரசியல் படம் என்ற சர்ச்சை எழுந்தது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க சென்றபோது விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டது.   

அதன்பிறகு, 2014ம் ஆண்டு வெளியான 'கத்தி' படத்தில், நிலத்தடி நீர் பிரச்சினை, பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களால் உருவாகும் தண்ணீர் தட்டுப்பாடு என நேரடி அரசியல் வசனங்களை பேசினார், விஜய். இதுபோல, தமிழக மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள மருத்துவ கல்வி சேர்க்கை மற்றும் மருத்துவ ஊழல்களை தட்டிக் கேட்பவராக, 'பைரவா' படத்தில் நடித்திருந்தார். 

அதன் தொடர்ச்சியாக வந்த 'மெர்சல்' படத்திலும் ஜல்லிக்கட்டு, ஜி.எஸ்.டி என அரசியல் நெடி அதிகமாகவே வீசியது.  இதனால், பாரதிய ஜனதாவின் மிகக் கடுமையான எதிர்ப்பையும் விஜய் சந்திக்க நேரிட்டது.  தற்போது, விஜயின் 62 வது படத்துக்கு 'சர்கார்' என பெயரிட்டுள்ளனர். 'சர்கார்' என்றால், 'அரசாங்கம்' என்று அர்த்தம். பெயருக்கு ஏற்றபடியே, முழுக்க முழுக்க அரசியல் கதை என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

'சர்கார்' படத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.க்களான நடிகர் ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் அரசியல்வாதிகளாகவே நடிப்பதால் அரசியல் வெப்பமும் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இது ஒருபுறம் இருக்க... சினிமாவுக்கு வெளியிலும் விஜயின் செயல்பாடுகள் அவரது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன. மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, நேரடியாக சென்று போராட்ட களத்தில் அமர்ந்து ஆதரவு தெரிவித்திருந்தார், விஜய்.

நீட் பிரச்சினைக்காக உயிர் துறந்த அனிதாவின் குடும்பத்தினரை சத்தமில்லாமல் சந்தித்து நிதியுதவி வழங்கினார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை இரு சக்கர வாகனத்தில் சென்று சந்தித்து நிதி உதவி வழங்கினார்.

இம்முறை பிறந்த நாள் கொண்டாட்டத்தைக் கூட, தூத்துக்குடி சம்பவத்துக்காக விஜய் ரத்து செய்து விட்டார். இப்படியாக, சினிமாவிலும், வெளியிலும் அவரது செயல்பாடுகள் அரசியல் பாதையை நோக்கியே இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். ரஜினி, கமல், விஜய் என மூன்று பேரையும் அரசியல் களத்தில் தமிழக மக்கள் விரைவில் பார்க்கலாம் என்றே தெரிகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்