ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்

x

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார் வினேஷ் போகத்...

முதல் சுற்றில் வீழ்த்தவே முடியாதவராக வலம் வந்த ஜப்பான் வீராங்கனை சுசாகியை அவர் அசைத்துப் பார்த்தது முதல், இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வரையிலான அவரின் வெற்றிப் பயணம், இம்முறை மல்யுத்தத்தில் தங்கம் நிச்சயம் என ரசிகர்களை முழக்கமிட வைத்தது.


எப்படியும் பதக்கத்துடன் வினேஷ் போஹத் நாடு திரும்புவார் என தேசமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரை தகுதி நீக்கம் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.....

50 கிலோ எடைப்பிரிவில் கூடுதலாக 100 கிராம் எடையுடன் இருந்ததால் நடந்தது இந்த தகுதி நீக்கம்.... வெறும் 100 கிராம் கூடுதல் எடையால் பறிபோனது பதக்கம்,....

ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்த இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார்.

அடுத்த அதிர்ச்சியாக இதற்கும் மேல் தன்னிடம் சக்தி இல்லை எனக் கூறி மனமுடைந்து மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் விடைபெற, அவருக்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

வினேஷ் போகத்தின் மேல்முறையீடு மனுவை ஆஸ்திரேலிய முன்னாள் நீதிபதி அனபெல் பென்னட்டை மத்தியஸ்தராக வைத்து விசாரித்த சர்வதேச நடுவர் மன்றம், தீர்ப்பை அறிவிக்காமல் தொடர்ந்து தள்ளிவைத்து வந்தது.

ஆகஸ்ட் 16ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வினேஷ் போகத்தின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுவதாக விளையாட்டு நடுவர் மன்றம் திடீரென அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் பதக்கமும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.

நடுவர் மன்றத்தின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ள இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய உள்ளதாகவும், வினேஷ் போகத்திற்கு ஆதரவாக துணை நிற்போம் என்றும் கூறியுள்ளார்.

எல்லா விளையாட்டுகளிலும் விதிகள்தான் இறுதியில் நிலைத்து நிற்கும் என்பதால் வினேஷ் போகத்திற்கான பதக்க வாய்ப்புகள் மங்கிவிட்டது.

அதே சமயம், மல்யுத்த விதி நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டியதற்கான நேரம் இது என்பதையும் உணர்த்தியுள்ளது வினேஷ் போகத் விவகாரம்...


Next Story

மேலும் செய்திகள்