பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் இறுதிப்போட்டிக்கு முன்பு வினேஷ் போஹத் தகுதி நீக்கம்

x

பாஜக முன்னாள் எம்.பியும் மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருந்தவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லி வீதிகளில் மாதக்கணக்கில் போராடிய மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவர்தான் வினேஷ் போஹத்....


நீதி கேட்டு போராடிய வினேஷ் போஹத்திற்கு நீதி கிடைத்ததோ... இல்லையோ.... அவ்வளவு அவதூறுகளும் பழிச்சொற்களும் பரிசாகக் கிடைத்தன. விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டு வினேஷ் போஹத்தின் திறமைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அதிகார வர்க்கத்தை அசைத்துப் பார்த்தார் வினேஷ் போஹத்.... வெறுப்பவர்களுக்கு என் வெற்றிகள்தான் பதில் என முழங்கினார்.

கங்கையில் பதக்கத்தை வீச முற்பட்டது முதல் காயத்தால் ஆசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது வரை கடந்த ஆண்டு வினேஷ் போகத்திற்கு கடினமாகவே இருந்தது.

ஆனால் பழி சுமத்தியவர்களுக்கு வெற்றிகளால் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வேட்கை வினேஷ் போஹத்திற்குள் கனன்று கொண்டிருந்தது.

ஆம்.... அந்த வேட்கையுடன்தான் பாரிஸ் ஒலிம்பிக் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் களம் கண்டார் வினேஷ் போஹத்....

முதல் சுற்று ஜப்பான் வீராங்கனை சுசாகியுடன்... தோல்வியின் அர்த்தமே அறியாதவர் அவர்.... தொடர்ச்சியாக 82 போட்டிகளில் வென்றவர்... அப்படிப்பட்ட சுசாகிக்கு தோல்வியைப் பரிசளித்து, தான் யாரென்று உலகிற்குப் பிரகடனம் செய்தார் வினேஷ் போஹத்...

காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை லிவாச்சை சாய்த்த வினேஷ் போஹத், அரையிறுதியில் கியூப வீராங்கனை கஸ்மேனை வென்று ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என வரலாறு படைத்தார்.


அத்தனை அவதூறுகள்... அத்தனை வலிகள்... அத்தனை துயரங்களைக் கடந்து, பலவற்றைத் தியாகம் செய்து, பல ஆண்டு பயிற்சியின் பலனாக,, வெற்றியின் விளிம்பில் வினேஷ் போஹத் இருந்த தருணத்தில் பதக்கம் நழுவி இருக்கிறது.

வினேஷ் போஹத்தின் தகுதி நீக்கம் பல்வேறு வினாக்களுக்கும் வித்திட்டுள்ளது. விதியா... சதியா... என எழுப்பப்படும் கேள்விகளுக்கு வினேஷ் போஹத்திடம்தான் பதில் இருக்கும்....

மல்யுத்த களத்தில் மட்டுமின்றி களத்திற்கு வெளியேயும் சமர் செய்த போராளிதான் வினேஷ் போஹத்... பதக்கம் வென்றாலும் வெல்லாவிட்டாலும் ஒட்டுமொத்த இந்தியாவின் வீர மகள் வினேஷ் போஹத்...


Next Story

மேலும் செய்திகள்