`தேர்தல் பத்திரம் குறித்த முழு உண்மையும் தெரிந்தால்..' - கொளுத்தி போட்ட அமித் ஷா
தனியார் ஊடக கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, நாடு முழுவதும் பல முறை தேர்தல் நடைபெறுவதால், வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளதாக கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எப்போது நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து நாடாளுமன்றம் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார். காங்கிரஸ் கட்சி ரொக்கமாக நன்கொடை பெற்றதோடு 12 லட்சம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அரசியலில் கறுப்புப் பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியதாக கூறிய அவர், தேர்தல் பத்திரத்தை முழுமையாக நீக்கியதற்கு பதிலாக அதனை மேம்படுத்தி இருக்கலாம் என்றும் கூறினார். தேர்தல் பத்திரம் தொடர்பான ஒட்டு மொத்த தரவுகளும் வெளியானால், எதிர்க்கட்சிகள் யாரையும் நேருக்கு நேர் சந்திக்க கூட முடியாமல் ஓடி ஒளிந்து கொள்ளும் என்றும் அவர் விமர்சித்தார்.