தைலாபுரம் மீட்டிங்கில் உறுதியான முடிவு...அதிமுகவுக்கு ஷாக் கொடுத்த பாமக - தேமுதிக-வின் டபுள் கேம்
நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுடன் பா.ம.க கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ம.க எந்த அணியில் இடம்பெறும் என நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐந்து விழுக்காடு வாக்குகளை கூட விட்டுவிடக்கூடாது என்பதில், அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் தீவிரமாக முயன்று வருகின்றன. இரு கட்சிகளுமே பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டணி தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாசும், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸும் தைலாபுரம் தோட்டத்தில் விவாதித்து ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி நீடிப்பதால் கூட்டணி முடிவு அறிவிப்பை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓரிரு தினங்களில் முடிவு எட்டிய பிறகு அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க. என ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய தே.மு.தி.க., தற்போதும் அதே பாணியை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை எம்.பி. பதவியை குறிவைக்கும் தே.மு.தி.க., கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணியை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.