கமலாவை படுகுழியில் தள்ளிய பைடன் செய்த காரியம்.. நிறமோ பாலினமோ அல்ல.. தோல்விக்கு இதுவே முக்கிய காரணம்
அமெரிக்காவில் ஆளும் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக களமிறங்கிய கமலா ஹாரிஸ் தோல்வியை தழுவியதற்கான காரணங்கள் என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
அமெரிக்கவின் முதல் கருப்பின பெண் துணை அதிபர் என்ற பெருமையோடு வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தவர் கமலா ஹாரிஸ்... அவரே எதிர்பாராத வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ய்ப்பு கிடைத்தது.
ஆம், வயது முதிர்வு காரணமாக தேர்தல் பிரசாரங்களிலும், டிரம்ப் உடனான விவாதங்களிலும் பைடன் சொதப்ப... எதார்த்தமாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர்தான் கமலா ஹாரிஸ்...
அதுவும் கட்சியில் சட்டென்று முடிவு செய்யப்படவில்லை.. கடும் இழுபறிக்கு பிறகு கமலாவை களமிறக்க சம்மதித்தது ஜனநாயக கட்சி... பைடனுக்கு பதிலாக கடைசி நம்பிக்கை நட்சத்திரமாக ஜனநாயக கட்சியின் நம்பிக்கையை தோளில் சுமந்தவாறு பிரசாரங்களை முன்னெடுத்தார் கமலா ஹாரிஸ்.
டொனால்டு டிரம்பை நேரடி விவாதத்தில் அவர் கார்னர் செய்த விவகாரம் இன்டர்நேஷ்னல் அளவில் டிரெண்ட் ஆனது.
ஆனால்... பைடன் அரசாங்கம் சந்தித்திருந்த பொருளாதார நெருக்கடியும், விலைவாசி உயர்வும் பெரும் சவாலாகவே அவர் முன்பாக தொடர்ந்தது. இதை சமாளிக்க கமலா வாக்குறுதிகளை வீசினாலும்... வாக்காளார்கள் பார்வை டிரம்பே சிறப்பாக செயல்படுவார் என்பதாக இருந்தது.
அதற்கு துணை அதிபராக கமலா ஹாரிஸ் எடுத்த முன்னெடுப்புக்கள் என்ன...? என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. நாட்டின் ஜனநாயகம், கருக்கலைப்பு விவகாரங்களை முன்வைத்து கமலா பிரசாரம் செய்தார். அவர் எல்லோரையும் ஒருங்கிணைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தன.
ஆனால்... அமெரிக்காவே முதன்மை என்ற கொள்கையோடு பொருளாதாரம், சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தை பிரதானமாக கொண்டு வெற்றியை வசமாக்கிவிட்டார் டொனால்டு டிரம்ப்...
பெண்களுக்கு ஆதரவாக கருக்கலைப்பு கட்டுப்பாடு சட்டம் ரத்து செய்யப்படும்... நிதி உதவி என்ற வாக்குறுதிகளும் கமலா ஹாரிசுக்கு கைக்கொடுக்காமல் போய்விட்டது...
கமலாவுக்கு காலதாமதமும் ஒரு தடைக்கல்லாகிப்போனது.
வயது முதிர்ந்த பைடனை மீண்டும் களமிறக்கிய ஜனநாயக கட்சி முதலிலேயே கமலாவை களமிறக்கவில்லை. வாக்குறுதிகளை மக்கள் மனதில் நிலைநிறுத்த அவருக்கு கூடுதல் காலத்தையும் கொடுக்காமல் போனது.
கமலா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே, ஒரு இந்திய வம்சாவளிப் பெண்ணை அமெரிக்கர்கள் தங்கள் அதிபராக ஏற்றுக்கொள்வார்களா...? என்ற பெரும் கேள்வி எழுந்தது. குடியரசு கட்சியில் அவருக்கு எதிரான இனரீதியான, பாலினரீதியான பிரசாரங்களும் மேலோங்கியிருந்தது.
அவை அனைத்தையும் எதிர்க்கொண்டு சக்தியோடு போராடிய கமலா ஹாரிஸ்... டொனால்டு டிரமபுக்கு ஒரு கடும் போட்டியை கொடுக்க முடிந்ததே தவிர வெற்றியை வசமாக்க முடியாமல் போனது.
அமெரிக்காவில் பெண் அதிபர் என்ற கனவும் தகர்ந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜனநாயக கட்சி களமிறக்கிய ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து வெற்றியை வசமாக்கியிருந்தார் டிரம்ப்... இப்போது கமலா ஹாரிசை தோற்கடித்து வெற்றியை வசமாக்கியிருக்கிறார் டிரம்ப்...