ஒற்றை வார்த்தை நிகழ்த்திய `மேஜிக்' - உலகமே வாய்பிளந்த வெற்றி சூத்திரம்
டொனால்ட் டிரம்ப் அசாதாரண போட்டியை சமாளித்து வெற்றியை வசமாக்கிய காரணிகளை பார்க்கலாம்...
2021-ல் வெள்ளை மாளிகையை தியாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில்... அமெரிக்க நாடளுமன்றத்தில் நடந்த அட்டாக்... அரியணையை விட்டுக் கொடுக்க மறுத்து ட்ரம்ப் செய்த அட்டகாசம் எல்லாம், அவரது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க செய்துவிட்டது என்று ஆரூடம் சொல்லும் அளவிற்கு கொண்டுச் சென்றது
ஆனால்... அவருக்கான செல்வாக்கு குடியரசு கட்சியில் கொஞ்சமும் குறையவில்லை.. அதுவே அவரை குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக்கியது. ஜோ பைடன் அரசுக்கு எதிரான எதிர்ப்பலை, டிரம்புக்கு சாதகமான பாதையை வகுத்து கொடுத்திருந்தது.
தேர்தலில் ஜனநாயகம், துப்பாக்கி கொள்கை, சுகாதார கொள்கை, இனவெறி என பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும்...
பொருளாதாரம், விலைவாசி உயர்வு, அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம், கருக்கலைப்பு ஆகியவை பிரதான பிரச்சினையாக இருந்தன.
இவை... ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சி வேட்பாளராக களம் கண்ட டிரம்புக்கு சிவப்பு கம்பளத்தை விரித்தன. பிரசாரங்களில் வழக்கம்போல் அமெரிக்கர்களையும், அமெரிக்க நலன்களையுமே முன்னிலைப் படுத்தினார் டிரம்ப்...
அமெரிக்கா தவறான திசையில் செல்கிறது, பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என்பது 75 % அமெரிக்கர்களின் கருத்தாக இருந்தது.
இதை கச்சிதமாக பிரசாரத்தில் பயன்படுத்திய டிரம்ப்... கமலா, ஜோ பைடன் நம்முடைய பொருளாதாரத்தை மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள் என்றதுடன், அதை மீட்டெடுப்பேன் என சூளுரைத்தார்...
அமெரிக்கா மண்ணில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவேன், விலைவாசி உயர்வை குறைப்பேன், வரிகளை குறைப்பேன் என வாக்குறுதிகளை அள்ளி வீசியவர், அமெரிக்க முன்னுரிமை கொள்கையில் இறக்குமதி பொருட்களுக்கு 20 % வரை சுங்க வரி அதிகரிக்கப்படும் என்றவர் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 60 % சுங்க வரி விதிக்கப்படும் என்றார் அதிரடியாக..
எப்போதும் உணர்வுபூர்வமான விஷயங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவையே. அந்தவகையில், கமலா ஹாரிஸ் பெண்களின் கருக்கலைப்பு உரிமையை முன்னிலைப் படுத்திய வேளையில், அதையும் சமாளித்து சட்டவிரோத குடியேற்றத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களை முன்னிலைப் படுத்தினார். சட்டவிரோத குடியேறிகள் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவரது விமர்சனங்கள் இருந்தன.
இளம் வாக்காளர்கள் மத்தியிலும் செல்வாக்கு கொண்டவராக இருந்தார் டொனால்டு டிரம்ப். அமெரிக்காவில் கல்லூரி செல்லாத பணியாளர்கள்... வாக்குகளை குறிவைக்கும் வகையிலும் அவரது பிரசாரம் அமைந்தது.
துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பியவர், அனுதாப அலையையும் வசமாக்க தவறவில்லை..
வாக்காளர்களை நெருங்கும் பிரசாரத்திலும் கவனம் ஈர்த்தார் டிரம்ப். தேர்தல் பரப்புரைக்கு இடையே உணவகத்தில் ஃபிரென்ச் ஃபிரை செய்தும், தான் தொழிலாளர்களின் நண்பன் என காட்டிக்கொண்டார்.
இந்தியர்கள் விவகாரத்தில் வங்க தேச இந்துக்களுக்கு ஆதரவு கருத்தை தெரிவித்து இந்திய வாக்காளார்களை கவரவும் தவரவில்லை. வெளியுறவுக்கொள்கையில் கமலா ஹாரிசைவிட டிரம்ப் வலிமையானவர் என்ற கருத்தும் வாக்காளர்கள் மத்தியில் நிலவியது. கமலா ஹாரிஸ் ஜனநாயகம், கருகலைப்பு என தீவிரம் காட்ட ஒட்டுமொத்தமாக அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்று வெற்றியை வசமாக்கிவிட்டார் டிரம்ப்...