ரஷ்ய முதலீடு மோசடி - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
ரஷ்ய முதலீடு பெற்று தருவதாக கூறி மோசடி செய்த கும்பலை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தபோது, பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.ரஷ்ய அரசு இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், 2000 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் எனக் கூறி சென்னையை சேர்ந்த தொழிலதிபரிடம் 7 கோடி ரூபாய் மொசடி செய்த வழக்கில், முக்கிய நபரான அருண் ராஜ், மதன் குமார், ரூபா உள்ளிட்ட 9 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் அடிக்கடி ரஷ்யா சென்று வந்ததால், மோசடி மன்னன் அருண் ராஜ், மதன்குமார், ரூபா ஆகிய 3 பேரை 4 நாட்கள் கஸ்டடியில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விழிஞ்சம் கடற்கரையில் போதைப்பொருள், ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம் என்பவருக்கும் அருண்ராஜுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ரஷ்ய முதலீட்டை பெற்றுத் தருவதாகக் கூறி, மேலும் 5 பேரிடம் இரண்டரை கோடி வரை மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், ஈரோடு குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.