ஒபாமா கொடுத்த ஒற்றை குரல் - சூடுபிடிக்கும் அதிபர் தேர்தலில்
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகிய அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட ஆதரவை தெரிவித்தார். தொடர்ச்சியாக ஜனநாயக கட்சியில் அவருக்கு ஆதரவு குவிந்தது. கட்சி ராஜமாதாவாக பார்க்கப்படும் நான்சி பெலோசியும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்தார். கட்சியின் அதிபர் வேட்பாளராக ஆயிரத்து 976 பிரதிநிதிகள் ஆதரவு அவசியம். அதையும் தாண்டி கமலா ஹாரிஸ் ஆதரவை பெற்றிருப்பதாக கூறப்பட்ட வேளையில் முன்னாள் அதிபர் அமைதியாக இருந்தது சர்வதேச ஊடகங்களில் விவாதப்பொருளானது. கமலா ஹாரிஸ் வெற்றிபெறுவார் என ஒபாமா நம்பவில்லை எனவும் அமெரிக்க ஊடகம் தகவல் வெளியட்டது. இந்த சூழலில், கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவும், இவ்வார தொடக்கத்தில் கமலா ஹாரிசை தொடர்பு கொண்டு ஆதரவை தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒபாமா எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், கமலா அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார், அமெரிக்கா இக்கட்டாக இருக்கும் இந்த தருணத்தில், கமலா வெற்றிபெற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என தெரிவித்துள்ளார்.