ஆண்டுக்கு 7 லட்சம் பலியாகும் கொடிய நோய்க்கு முற்றுப்புள்ளி - ஆண் கொசுவால் நடக்க போகும் உலக அதிசயம்!

x

ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொசுக்களால் ஏற்படும் கொடிய நோய்களை எதிர்த்து போராடுவதற்கு எதிராக ஒரு புதிய ஆயுதத்தை உருவாக்கியுள்ளனர். இதுபற்றி துறைசார் வல்லுனருடன் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித் நடத்திய கலந்துரையாடல் இது.

உலகம் முழுவதும் கொசுக்களால் பரவும் மலேரியா, ஜிகா, டெங்கு போன்ற நோய்களால் ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொசுக்களால் பரவிய நோய்களால் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, அதில் 160 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் Macquarie பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு சர்வதேச ஆராய்ச்சியாளர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

toxic male technique என்று அழைக்கப்படும் இந்த தொழில் நுட்பத்தின் மூலம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்களின் விந்தணுக்களில் நச்சுத்தன்மை உடைய புரதம் உற்பத்தியாகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கத்திற்காக சேரும்போது, அவற்றின் விந்தணுக்களில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த புரதமானது பெண் கொசுக்களின் உடலுக்குள் சென்று அவற்றைக் கொன்றுவிடும்.

இவ்வாறாக பெண் கொசுக்களை மட்டுமே குறிவைத்து முழுமையாக அழிக்க திட்டமிட்டுள்ள விஞ்ஞானிகள், இதன் மூலமாக, மனிதர்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் படிப்படியாக குறைந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்