உலகே வெறிகொண்டு தேடும் பொருள்.. பதவியேற்றதும் ராணுவ படையெடுக்கும் டிரம்ப் - எதிரியாக மாறும் ஐரோப்பா?
கிரீன்லாந்தை ராணுவ பலத்துடன் ஆக்கிரமிப்பேன் என்று டிரம்ப் அறிவிப்பதற்கு காரணம் என்ன? அதனை ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பது ஏன்...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு
அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்ப் அகண்ட அமெரிக்கா பிளானை ஓப்பனாக தெரிவித்துவிட்டார்.
அதாவது கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக்குவது. கீரின்லாந்து, பனாமா கால்வாயை அமெரிக்கா கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என டிரம்ப் லிஸ்ட் நீண்டுக் கொண்டோ போகிறது.
இதில் கிரீன்லாந்தை ராணுவ பலத்துடன் ஆக்கிரமிக்க உள்ளதாக குறிப்பிடுகிறார் டிரம்ப். இப்படி டிரம்ப் பேராசை காட்டும் கீரின்லாந்து ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பிராந்தியம்.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே உள்ளதால் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்கு முக்கிய இடமாக விளங்குகிறது.
எண்ணெய், தாதுக்கள், இப்போது உலகம் எதிர்நோக்கி இருக்கும் பேட்டரிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிக்க தேவையான அரிய கனிம வளங்கள் மிகப்பெரிய அளவில் குவிந்திருக்கிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்து தீவில் உள்ள பனிப்பாறைகள் உருகி, ஆர்க்டிக் வழியாக உருவாகிய புதிய கப்பல் பாதைகள், உலகளாவிய கடல் பயண நேரத்தை குறைக்க வல்லதாகவும் இருக்கிறது.
இதனால் டிரம்ப் பார்வை நீண்ட காலமாகவே கிரீன்லாந்து பக்கம் இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தில் மக்கள் தொகை சுமார் 57 ஆயிரம் மட்டுமே. பொருளாதார ரீதியாக மானியங்களை மட்டும் சார்ந்திருக்கும் கிரீன்லாந்தில், சுதந்திர கோரிக்கையும் இருக்கிறது.
அதேவேளையில் கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என டிரம்ப் பேச்சுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. இதற்கிடையே டிரம்ப் பேச்சு அமெரிக்காவின் நட்பு நாடுகளிடம் இருந்தும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தனது இறையாண்மையில் அத்துமீற மற்ற நாடுகளை அனுமதிக்காது, அது யாராக இருந்தாலும் சரி என்று டிரம்பை எச்சரித்துள்ளது பிரான்ஸ்.
அமெரிக்கா படையெடுப்பு என்பதை நம்ப முடியவில்லை என்றும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை தெரிவிக்கிறது.
இதேபோல் டிரம்புக்கு ஜெர்மனியும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
கிரீன்லாந்து அதன் குடிமக்களுக்கு சொந்தமானது என சொல்லும் டென்மார்க், கிரீன்லாந்து ஒருபோதும் அமெரிக்கா பிராந்தியமாகாது என்று உறுதியாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து முக்கியம் என்று டிரம்ப் சொன்னாலும், அவரது பேச்சுக்கள் எல்லாம் அமெரிக்காவின் நீண்டகால நட்புறவையே பாதிக்கும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.