முதல் அடியிலேயே சீனாவுக்கு ஷாக் - உலக வல்லரசுகளே வியக்கும் ராஜதந்திரம்...தலையெழுத்தை மாற்றும் முடிவு
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், தெற்கு எல்லையில் எமர்ஜென்சி, உலக போர்களில் அமெரிக்க ராணுவம் பங்கேற்காது, 3ஆம் பாலினத்திற்கு அங்கீகாரம் கிடையாது உள்ளிட்ட பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்...
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் கட்டடத்தில், இசை நிகழ்ச்சியுடன் விமர்சையாக அதிபர் பதவியேற்பு விழா நடைபெற்றது.
அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட், டொனால்ட் டிரம்ப்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பைபிள் புத்தகத்தில் கை வைத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவியேற்றார்.
டிரம்ப் அதிபராக பதவியேற்றதை வரவேற்று, பீரங்கிகள் குண்டுகளை முழங்கின.
அதிபராக பதவியேற்ற பின் உரையாற்றிய டிரம்ப், பலம் மிகுந்த, சுதந்திரமான, நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என்றார். ஊழல் நிறைந்த, உள்நாட்டு பிரச்சினைகளை கூட கையாள முடியாத, சொந்த மக்களை பாதுகாக்காத அரசு இருந்ததாக விமர்சித்த டிரம்ப், இந்த நிலையை மாற்ற, இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருப்பதாகவும் கூறினார்.
அமெரிக்கா சந்தித்த மோசமான கட்டம் இந்த நொடி முதல் மாறி, சுதந்திரம் பிறந்திருப்பதாகவும், சிறந்த நிர்வாகம் மற்றும் வெற்றி அமெரிக்காவின் அடையாளமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். பதவியேற்கும் முன்பே, இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்த போது, பைடன், கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதாக கூறிய அதிபர் டிரம்ப், தென் எல்லைகளில் தேசிய அளவிலான எமர்ஜென்சியை பிரகடனப்படுத்துவதாக அறிவித்தார். அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார்.
'Drill Baby Drill' எனக்கூறி, அமெரிக்காவின் எண்ணெய் வளங்கள் அமெரிக்காவுக்கே என்ற டிரம்ப், உலகம் முழுவதும் அமெரிக்கா எரிசக்தியை ஏற்றுமதி செய்யும் என்றார். இறக்குமதி வரியை கூட்டுவதன் மூலம் அமெரிக்க கஜானாவை நிரப்ப உள்ளதாகவும், பணவீக்கத்தை குறைக்க அரசு இயந்திரத்தை முடுக்கி விடுவதாகவும் டிரம்ப் கூறினார்.
அரசியல் எதிரிகளை, அரசு அதிகாரத்தை கொண்டு தண்டிப்பது இனி நடக்காது என்றும், பேச்சுரிமை பாதுக்கப்படும் எனவும் டிரம்ப் உறுதி அளித்தார். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, அமெரிக்காவில் இனி ஆண், பெண் என்ற 2 பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் என்றும் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். உலக யுத்தங்களில் அமெரிக்க ராணுவம் பங்கேற்கப் போவதில்லை... அமெரிக்காவை பாதுகாப்பதே ராணுவத்தின் வேலை என்றும், வல்லமை கொண்ட ராணுவமாக அமெரிக்க ராணுவம் கட்டமைக்கப்படும் என்றும் கூறினார்.
சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பனாமா கால்வாய், அமெரிக்கா வசம் வரப்போவதாக அறிவித்த அதிபர் டிரம்ப், அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.