குற்றவாளியாக பதவியேற்கும் முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வந்தது தீர்ப்பு
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப்பிற்கு நீதிமன்றம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்காததால் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளான முதல் அதிபராக பதவி ஏற்க இருக்கிறார், டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் , ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் கடந்த ஆண்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் 34 குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக இருந்த ட்ரம்ப், தமக்கு வழங்கவிருக்கும் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்த நிலையில், கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள போதிலும் இந்த வழக்கில் தற்போது சிறை தண்டனை மற்றும் அபராதம் இன்றி டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைக்கு காணொளி காட்சி மூலம் ஆஜராகிய டிரம்ப் , தாம் அப்பாவி என கூறினார்.
ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்க உள்ள நிலையில், அவருக்கு சாதகமாக தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.