மூதாட்டியை கொலை செய்து.. செயினை பறித்து ஓடிய 2 சிறுவர்கள்.. விருதுநகரில் பரபரப்பு | Virudhunagar
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மூதாட்டி கொலை வழக்கில் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். பந்தல்குடியில் உள்ள வெள்ளாபுரம் தெருவில், சுப்புலட்சுமி என்ற மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கலியும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சுப்புலட்சுமியின் மகன் பாலாஜி அளித்த புகாரின் பேரில், பந்தல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், பந்தல்குடி கோவில்குளம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து சென்றபோது, அவர்களைக் கண்டு ஓடத்தொடங்கிய 2 சிறுவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சிறுவர்கள் இருவரும் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
Next Story