பேசி கொண்டிருக்கும் போதே உயிர் நண்பனுக்கு ஆற்றில் சமாதி எழுப்பிய நண்பன்.. ஊரே கூடி வேடிக்கை
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சேமங்கலத்தை சேர்ந்த முத்துகுமார் என்பவரது வங்கி கணக்கில் அவரது தந்தை 8 லட்சம் ரூபாய் செலுத்தியிருந்தார். முத்துகுமாரின் நண்பரான தமிழரசன் என்பவர் அந்த பணத்தை கடனாக வாங்கியிருந்தார். முத்துகுமார், தமிழரசனிடம் பணத்தை திருப்பி கேட்டபோது, பல்வேறு காரணங்களை கூறி தாமதப்படுத்தியதாக தெரிகிறது. சேமங்கலம் அருகே உள்ள மலட்டாற்று பகுதியில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, பண விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் தமிழரசன் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் முத்துக்குமாரை அடித்து கொலை செய்து, ஆற்றங்கரையில் புதைத்து விட்டு ஊர் திரும்பிவிட்டார். இந்நிலையில் முத்துகுமாரின் நிலை குறித்து தெரியாததால், அவரது குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முத்துகுமாரின் செல்போன் தரவுகள் அடிப்படையில், போலீசார் தமிழரசனை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். மலட்டாற்றில் உடல் புதைக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்த நிலையில், முத்துகுமாரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவிய நிலையில், சேமங்கலம் கிராம மக்கள் ஆற்றங்கரையில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.