UKG சிறுமி மரணத்தில் புதிய வீடியோ... கையில் இருந்த குழந்தை யார்?-"உண்மை இதுதான்" எதிர்பாரா திருப்பம்

x

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நான்கு வயது குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தாலுக்கா அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருபவர் பழனிவேல. இவருடைய நான்கு வயது குழந்தை லியா லட்சுமி அருகே உள்ள தனியார்ப் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி பள்ளிக்குச் சென்ற குழந்தை கழிவறைக்கு சென்ற போது தவறி கழிவு நீர்த்தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் லியா உயிரிழந்ததாக கூறி குழந்தையின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி பெற்றோர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பள்ளியின் தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த இரு தினங்களுக்குக் முன் கைது செய்யப்பட்ட மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கியது.மேலும் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் லியா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காட்சியில் உயிரிழந்த லியாவை கையில் வைத்துக் கொண்டே தேடுவது போன்ற காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த காட்சியில் ஏற்கனவே உயிரிழந்த லியாவை விபத்தில் சிக்கி உயிரிழந்தது போல சித்தரிக்கப்பட்டு காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் லியாவின் தாய் சிவசங்கரி தனது குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளை முழுமையாகப் பள்ளி நிர்வாகம் அளிக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார். மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிவாரண தொகையான ஐந்து லட்சம் தங்களுக்கு வேண்டாம் என்றும் இந்த வழக்கை மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் புதிதாக வெளியான சிசிடிவி காட்சிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்து இருக்கிறது. அதில் சிசிடிவி காட்சியில் இருக்கக் கூடிய குழந்தையின் பெயர் காருண்யா என்றும் அந்த குழந்தையின் தாய் தமிழரசி என்றும் தெரிவித்து இருக்கின்றனர். தமிழரசி அதே பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் என்றும், சம்பவத்தின் போது அவரது குழந்தையினை கையில் வைத்துக் கொண்டு தேடும் காட்சிகளைத் தான் தவறாகச் சித்தரித்து வெளியிடப்படுவதாக விளக்கம் அளித்து இருக்கின்றனர்.மேலும் இது போன்ற தவறான காட்சிகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் மாவட்ட காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்